மதுரை / ராமநாதபுரம்: அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார்.
இந்நிலையில், தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை வந்த செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் ஒரே காரில் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு வந்தனர்.
மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகே இருவரையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர். டிடிவி.தினகரன் வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர். ஆனால், கூட்டம் அதிகமாக இருப்பதாக போலீஸார் கூறியதையடுத்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் சந்தித்து, சிறிது நேரம் ஆலோசனை செய்தனர். பின்னர் பசும்பொன் சென்ற மூவரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சசிகலாவுடன் ஆலோசனை: துரோகத்தை வீழ்த்தவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் அவர்கள் சபதம் செய்தனர். பின்னர் அங்கு வந்த சசிகலாவை, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்தித்துப் பேசினர். ஆனால், டிடிவி.தினகரன் சசிகலாவை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார்.
நீக்க தயக்கம் இல்லை... இந்நிலையில், செங்கோட்டையனின் செயல்பாடுகள் தொடர்பாக மதுரை கப்பலூரில் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. அதற்கு சில நடைமுறைகள் உள்ளன, பொறுத்து இருங்கள்” என்றார். சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு, அதிமுகவில் மட்டுமின்றி, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.