தமிழகம்

தவெகவை முடக்க முயற்சி செய்தனர்; அவர்களின் எண்ணம் ஈடேறாது: சிடிஆர் நிர்மல் குமார்

தமிழினி

சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்” என அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவெகவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தவெக-வின் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: தவெகவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இக்குழுவில் விவாதிக்கப்பட்டது. விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

கரூர் சம்பவத்தையொட்டி, மக்களை சந்திக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட அனைவரும் காத்திருந்தோம். ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவல் படி அனைத்து ரோடுகளும் தடை செய்யப்பட்டது. தவெக கொடி கட்டிய எந்த வாகனத்தையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. கரூர் சம்பவத்தன்று அனைத்து நிர்வாகிகளும் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

அந்த நாள் இரவு எத்தனை அமைச்சர்கள் அங்கே வந்து நாடகம் நடத்தினார்கள் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். பிரேத பரிசோதனையை உடனடியாக முடித்து விட்டதாக தகவல் கிடைத்தது. கண்டிப்பாக இங்கே எங்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டோம். எங்களின் குற்றச்சாட்றே காவல்துறையின் மீதுதான். அதனால் தான் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும் என சென்னை கிளம்பினோம்.

அவர்கள் எண்ணம் நிச்சயமாக நடைபெறாது. தவெக கட்சியை முடக்க நினைத்தார்கள். மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர். கரூர் சம்பவம் எப்படி நடந்தது என்பது மக்களுக்கு தெரியும்.41 பேர் உயிரிழந்தது தான் மிகப்பெரிய துக்கம், மீள முடியாத துக்கம். 41 பேரின் மரணம் தான் எங்களை கடுமையாக பாதிக்கிறது. எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT