மதுரை: மதுரையின் 2-வது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ரயில்வே துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இடநெருக்கடியை குறைக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதி, விரைவான, மகிழ்ச்சியாக ரயில் பயணத்தை ஏற்படுத்தவும், கூடல் நகர் ரயில் நிலையத்தை 2-வது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்பது மதுரை மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. தற்போது தெற்கு ரயில்வே அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கூடல் நகர் ரயில் நிலையத்தை 2-வது முனையமாக்குவதற்கான ஆய்வுக்கூட்டம் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், மூத்த கோட்ட வணிக மேலாளர் டி.எல்.கணேஷ், மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தற்போது இந்த ரயில் நிலையத்தில் மதுரை-கோயம்புத்தூர் விரைவு ரயில், மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் ஆகியவை நின்று செல்கின்றன. சென்னை-குருவாயூர் விரைவு ரயில் ஒரு மார்க்கத்தில் மட்டும் நின்று செல்கிறது. இதன் காரணமாக இந்த ரயில் நிலையத்தில் மிகக் குறைந்த அளவிலான பயணிகளே வந்து செல்லும் நிலை உள்ளது. தற்போது 2-வது முனையமாக மாற்றும் முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளதால், கூடல்நகர் ரயில் நிலையம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மதுரை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தினர் கூறுகையில், ‘‘முன்பதிவு கவுன்ட்டர்கள், கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்க வேண்டும். பயணிகளுக்கான ஓய்வறைகள், குடிநீர் வசதி, காத்திருப்பு நாற்காலிகள் அமைக்க வேண்டும். போதுமான பேருந்து வசதியும் தொடங்க வேண்டும்’’ என்றனர்.
மதுரையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்: மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘முதற்கட்டமாக பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக ரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன. பார்க்கிங் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். பாண்டியன், வைகை, திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, அந்தியோதயா விரைவு ரயில்கள், விழுப்புரம் பயணிகள் ரயில் ஆகிய 6 ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்கள் செல்வதற்கு சோழவந்தான், செக்கானூரணி வழியாக புறவழி்ப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் நெரிசல் குறைந்து கூடுதல் இடவசதி கிடைக்கும். வரும் 10 ஆண்டுகளில் மதுரையின் வளர்ச்சிக்கு இந்த கூடல் நகர் ரயில் முனையம் மிக முக்கிய பங்காற்றும்’’ என்றார்.