சென்னை: நாடுமுழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தற்கொலையைத் தடுக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும், மாணவர்களின் மன நலனைத் தெரிந்துகொள்ளவும் ஆன்லைனில் தகவல் சேகரிப்பு சர்வேயை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஆங்காங்கே நடக்கும் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கவும், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய செயல்திட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த ஆக.8-ம் தேதி https;//ntf.education.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.
அந்த இணையதளத்தில் மாணவர்கள், பெற்றோர், கல்லூரியைச் சேர்ந்தவர்கள், துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். கல்வி வளாகங்களில் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.
அந்த சர்வேயில் பங்கெடுப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படாது. அதனால், அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும், மாணவர்களும், பெற்றோரும் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.