திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அரசு நிர்வாகத்தின் மீது அவ்வப்போது தனது குறைகளை அடுக்கி வருகிறார். முதல்வர் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என்கிற அளவுக்கு அவரது குற்றச்சாட்டுகள் நீளும் நிலையில், “சட்டப்பேரவையில் நான் பேசும் பேச்சை முழுமையாக வெளியிடக்கூட இந்த அரசு பயப்படுகிறது” என்று இப்போது பாய்ந்திருக்கிறார் வேல்முருகன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பேசிய வேல்முருகன், “நான் சட்டப்பேரவையில் 20 நிமிடங்கள் பேசினால் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வெளியிடப்படுகிறது. அதை முழுமையாக வெளியிடக்கூட இந்த அரசு பயப்படுகிறது. சில சமயங்களில் நான் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் உட்பட யாராலும் பதிலளிக்க முடிவதில்லை” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் அரைகுறை ஆடை கலாசார நிகழ்வை நடத்தக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்குக் காரணமே நான் சட்டப்பேரவையில் பேசிய பேச்சுதான். இதேபோல், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும்; இல்லையெனில் இதை நடத்துவோர் எங்களது சுங்கச்சாவடி போராட்டத்தைப் போல, ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். கடந்த நாலரை ஆண்டுகளில் நான் சட்டப்பேரவையில் பேசியதையும் சாதித்ததையும் மக்களிடம் எடுத்துச் சென்றாலே, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “சிறிய கட்சியாக தொடங்கப்பட்ட எங்கள் கட்சியானது இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. இன்றைய செயற்குழு கூட்டத்தில, தமிழீழ படுகொலைகள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். எங்களின் இந்தக் கோரிக்கைகளை எல்லாம் தமிழக அரசு ஏற்காவிட்டால் தேர்தல் கூட்டணி குறித்து அடுத்தகட்ட முடிவெடுப்போம். வரப்போகும் தேர்தலில் தவாக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் நிச்சயம் அதிகரிக்கும்” என்றார்.