இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும். பிஹாரில் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இந்த மாநிலங்களில் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்தார்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026-ல் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் முழுமையானதாகவும், சரியானவையாகவும் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனவே, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்ளை நீக்குவதும், புதிதாக தகுதி உள்ளவர்களை சேர்ப்பதும் அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் (Revision மற்றும் Intensive Revision) என்ற முறைகளை பின்பற்றி சரியான வாக்காளர் பட்டியலை உறுதிபடுத்துவது இயல்பான ஒரு நடைமுறை.
இந்தியாவின் சிறப்பே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது தான். அதற்கு இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் சரியானதாக இல்லை. 2023-ல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், அந்த தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பேர் மற்றும் இறந்தவர்கள் 8 ஆயிரம் பேர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இது தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. 2024 மக்களவை தேர்தலின்போது, சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் இறந்தவர்கள் உள்ளிட்ட 44 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி 31 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம்.