புயல் நெருங்கும் நிலையில், விசாகப்பட்டினம் ஆர்.கே. பீச்சில் நேற்று 10 அடி உயரம் வரை எழுந்த ராட்சத அலைகள். 
தமிழகம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ‘மோந்தா’ புயல் இன்று இரவு கரையைக் கடக்கிறது

என்.மகேஷ்குமார்

விஜயவாடா: ‘மோந்தா’ புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி ஆந்திராவில் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவில் ‘மோந்தா' புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தீவிரப் புயலாக இன்று இரவு கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது, அப்பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் அதிவேகமான சுழல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, கடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், பிரகாசம், நெல்லூர், சித்தூர்,அனந்தபுரம், கடப்பா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று அமராவதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் எஸ்.பி.க்கள், உயர் அதிகாரிகளுடன் காணொலி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். உரிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, மோந்தா புயல் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அவர் விவரித்தார்.

பின்னர், அமைச்சர்கள் நாரா லோகேஷ், அனிதா, தலைமைச் செயலர் விஜயானந்த் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். மோந்தா புயல் காரணமாக அக்.27, 28, 29-ம் தேதிகளில் விசாகப்பட்டினம் - ஹைதரா பாத், விசாகப்பட்டினம் - செகந்திராபாத், டெல்லிக்கு செல்லும் எபி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், விசாகா - திருப்பதி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் உட்பட 97 ரயில்களை தென் மத்திய ரயில்வே மண்டலம் ரத்து செய்துள்ளது.

SCROLL FOR NEXT