ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள `மோந்தா’ புயலினால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டபலம் வலுபெற்று புயலாக மாறி உள்ளது. இந்தப் புயலுக்கு `மோந்தா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று செவ்வாய் கிழமை மாலை ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் திங்கட்கிழமை தமிழக துறைமுகங்களில் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டது.
மேலும் கரையோரங்களில் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.