மதுரை மாவட்டம் திருமங்கலம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலான புதிய பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் திட்டம் முடங்கியுள்ளது. எனவே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் நகராட்சி தென் மாவட்டங்களின் நுழைவுவாயிலாக உள்ளது. நகராட்சியின் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கும், சுற்றியுள்ள கிராமப் புறங்களுக்கும் தினமும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் விருதுநகர் மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், கேரளா மாநிலத்துக்குச் செல்லும் தொலைதூர பேருந்துகள் திருமங்கலம் நகருக்குள் வந்து செல்வதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்தகைய தொலைதூர பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வராமல், காவல் நிலையம் எதிரிலுள்ள மதுரை-விருதுநகர் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கடந்த 2019-ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க 2019-ல் அரசாணை வெளியிட்டு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடும் பெற்றுத் தந்தார். தற்போது திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளாகியும் புதிய பேருந்து நிலைய பணிகள் செயல்படுத்தப்படாமல் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருமங்கலம் நகராட்சி பொதுமக்கள் கூறியதாவது: திருமங்கலம் நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மதுரை- கன்னியாகுமரி புறவழிச்சாலையில் பேருந்து நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்புதிய பேருந்து நிலையம் 29,376 சதுர அடி பரப்பளவில் 45 பேருந்துகள் நிற்கும் வகையில் அண்ணா பல்கலைக் கழக தொழில் நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2019-ல் அரசாணை வெளியிட்டு, ரூ.22 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுளாக திமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த வில்லை, என்றார். இதுகுறித்து திருமங்கலம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அசோக் குமாரை தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.
இதுகுறித்து திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கூறுகையில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு மட்டும் செய்துள்ளனர்.
தற்போது தான் மதுரை- கன்னியாகுமரி புறவழிச் சாலையில் அமைந்துள்ள 4 ஏக்கருக்கு மேலான நிலத்தை நகராட்சி சார்பில் கையகப்படுத்தி வேலி அமைத்துள்ளோம். மேலும், அந்த நிலம் தொடர்பாக சிலர் வழக்கும் தொடர்ந்துள்ள தால் பிரச்சினையில் உள்ளது. அதனை ஒட்டியுள்ள தனியார் இடங்களையும் சேர்த்து கையகப்படுத்தினால் தான் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியும். என்றார்.