டிடிவி தினகரன் ஓர் காலாவதியான அரசியல்வாதி, அவரைப் பற்றி பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுகவை முன்னைவிட அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார். “இந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி இருக்கும் அதனால், தவெக தலைவர் விஜய் பழனிசாமியை தேவையில்லாமல் தோளில் தூக்கி சுமக்கமாட்டார்” என்று நேற்று முன் தினம் கருத்துச் சொல்லி இருந்தார் தினகரன்.
இது தொடர்பாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், ‘‘ஜெயலலிதா இருக்கும்போது இந்த டி.டி.வி.தினகரன் எங்கே இருந்தார்? அவரால் துரத்தியடிக்கப்பட்ட இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஆதிக்கம் செலுத்த நினைத்தார். ஆனால், தொண்டர்கள் அவரை புறக்கணித்தனர். அவரது கட்சியும் போனியாகவில்லை. அந்த விரக்தியில் அவர் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் பணி, மக்களுக்கான திட்டங்கள் குறித்து தினகரன் பேச வேண்டும். அவரது கட்சிக்கான எதிர்காலத்தைப் பற்றி பேச வேண்டும். அவரது கட்சியையை விட்டுவிட்டு இன்னொரு கட்சியை, அதுவும்இன்னும் மக்கள் செல்வாக்கை நிரூபிக்காத ஒருகட்சியை தூக்கிவைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலில் காலாவதியாகி விட்டதால் மீடியா வெளிச்சம் இல்லாவிட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதற்காக இப்படி எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் தினகரன்.
தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கும் நிலையில் அது பெரிய விவாதப் பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் பேசாத தினகரன், போகாத ஊருக்கு வழி சொல்வது போல தேவையின்றி தினமும் அதிமுகவை விமர்சிப்பதையே வேலையாக வைத்துள்ளார். காலாவதியான மருந்தை உட்கொண்டால் அது உடலுக்கு விஷமாக மாறும். அதுபோல, காலாவதியான அரசியல் தலைவர் டி.டி.வி. தினகரனின் கருத்து குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.