தமிழகம்

சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்

எம்.கே.விஜயகோபால்

தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.

இதுபற்றி நம்மிடம் பேசிய நாதக மூத்த நிர்வாகிகள் சிலர், “எந்தத் தொகுதியில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது மற்ற கட்சிகள் கடைபிடிக்கும் உத்தி. அதர பழசான இந்த ஃபார்முலாவை சீமானும் இப்போது கையில் எடுத்திருப்பது தான் வேதனையளிக்கிறது.

உதாரணமாக, திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோரை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும் என மற்ற கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாத ஐயர், கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பாப்பா உமாநாத், அதிமுகவைச் சேர்ந்த ரத்தினவேல் ஆகியோர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் அவர்களையும் திருவெறும்பூர் மக்கள் ஜெயிக்க வைத்த வரலாறு இருக்கிறது.

‘வரலாற்றைப் படியுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமான், இந்த வரலாறை எல்லாம் மறந்துவிட்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். அவரை புரமோட் செய்யும் விதமாக திருவெறும்பூரில் மருது சகோதரர்களுக்கு விழா எடுக்கிறார். ஆக, ‘எங்களது நோக்கம் அரசியல் மாற்றம் அல்ல... அடிப்படை மாற்றம்’ என்று முழங்கி வரும் சீமான், இப்போது அதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி” என்றனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘ சீமான் சாதி அரசியலுக்குள் நுழைகிறார் என்பதே தவறான வாதம். 2024 மக்களவைத் தேர்தலில் நாதக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தற்போது வாய்ப்பளிக்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். அதை கவனத்தில் கொண்டே இம்முறை திருவெறும்பூரில் என்னை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் சீமான்.

தமிழ் சமூகத்தில் இதுவரை பிரதானமாக வாய்ப்பளிக்கப்படாத குயவர், வண்ணார், அருந்ததியர், பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்க சீமான் முடிவெடுத்துள்ளார்’’ என்றார்.

SCROLL FOR NEXT