மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; இந்த பொதுக்குழு கூட்டமானது வரும் சட்டப் பேரவை தேர்தலில் தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிப்பதற்கான முன்னோட்டம்.
ஆகவே, கட்சியினர் கண்ணும் கருத்துமாக தேர்தல் பணிகளைச் செய்து தமாகாவுக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மரியாதைக்குரிய கட்சிகளில் முதல் வரிசையில் அமரக்கூடிய அளவுக்கு தகுதி பெற்ற கட்சி தமாகா மட்டுமே. நமக்கென ஒரு அரசியல் வரலாறு உண்டு. இங்கு வந்துள்ள நிர்வாகிகள் அனைவரும் மூன்று தலைமுறைக்குச் சொந்தக்காரர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
காமராஜர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் இங்கே அமர்ந்திருப்பது பெருமை சேர்க்கிறது. நமது பணி மேலும் தொடர வேண்டும்; சிறக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வெற்றிக்கு கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். நமது வேட்பாளர்கள் வெற்றி பெற உறுதி எடுக்க வேண்டும். இதை நோக்கித் தான் இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமாகா கடந்த மூன்று மாதங்களாக தேர்தல் வியூகங்களை அமைத்து கூட்டங்களை நடத்தி வருகிறது. எனவே, வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற, நாம் அனைவரும் மத்திய அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வலுவான கூட்டணியை உருவாக்கிடவும் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுத்திடவும் ஜி.கே.வாசனுக்கு முழு அதிகாரமளித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றத் தவறிய தேர்தல் வாக்குறுதிகளையும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விஷயங்களையும் கிராமம் முதல் நகரங்கள் வரை பிரச்சார இயக்கம் நடத்தி மக்களுக்கு விளக்கிச் சொல்லவும் தீர்மானிக்கப்பட்டது.