தவெக வழக்கறிஞர்கள் 
தமிழகம்

சிபிஐ எஃப்ஐஆரில் நிர்வாகிகள் பெயர்: நகல் கேட்டு நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் மனு

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: சிபிஐ எஃப்ஐஆரில் தவெக நிர்வாகிகள் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் நீதிமன்றத்தில் நகல் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் மனு செய்துள்ளனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் நகர போலீஸார் தவெக நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வுக்குழு அக்.3-ம் தேதி அமைக்கப்பட்டது. அக்.5-ம் தேதி கரூர் வந்த எஸ்டிஐ விசாரணையை தொடங்கியது. அரசு அதிகாரிகள், தவெக நிர்வாகிகள், உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், மதியழகனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

அக்.13-ம் தேதி உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து அக்.16-ம் தேதி கரூர் வந்த சிபிஐயினரிடம் அக்.17-ம் தேதி எஸ்ஐடி விசாரணை ஆவணங்களை ஒப்படைத்தது. சிபிஐ சார்பில் அக்.22-ம் தேதி கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கடிதம் ஒன்றை சிபிஐ இன்ஸ்பெக்டர் ஒப்படைக்கச் சென்றுள்ளார். அப்போது, கரூர் ஜேஎம் 1 மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் விடுப்பு என்பதால், ஜேஎம் 2 நீதிமன்றத்தில் அந்தக் கடிதம் ஓப்படைக்கப்பட்டது.

அதில் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) இருப்பதாக கூறப்பட்டது. அதில், சிபிஐ விசாரணை அதிகாரியான ஏஎஸ்பி முகேஷ்குமார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் என குறிப்பிட்டு அக்.18-ம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள எஃப்ஐஆரின் நகலை கேட்டு இன்று (அக்.25-ம் தேதி) தவெக வழக்கறிஞர் அரசு மற்றும் அக்கட்சியின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT