‘பட்டாசு’ மாவட்டத்து சீனியர் மாண்புமிகுவுக்கு இந்த முறை சீட் கன்ஃபார்ம் இல்லை என்கிறார்கள். இந்தத் தகவலை அண்மைக் காலமாக ஆலய கட்சி நிர்வாகிகள் அவர் காதுபடவே பேசிக் ‘கொல்’கிறார்களாம். ‘அண்ணாச்சி’ மீது பெரிதாக புகார்கள் ஏதும் இல்லை என்றாலும் ‘ஏஜ் ஃபேக்டர்’ இடிக்கிறதாம். அதனால் சீட் கொடுக்க யோசிக்கிறதாம் தலைமை. தந்தைக்கு மாற்றாக தனயனுக்கு சீட் தரப்படலாம் என்றும் சிலர் சந்தடிச்சாக்கில் சந்தேகம் கிளப்புகிறார்களாம்.
இதையெல்லாம் கேட்டு மன வருத்தத்தில் இருக்கும் சீனியர், சமீப நாட்களாக கழகப் பணிகளிலும் துறை சார்ந்த பணிகளிலும் பிடிப்பில்லாமலேயே இருக்கிறாராம். பருவமழை தனது ‘பவரைக்’ காட்டி வரும் நிலையில், அதைக் கவனித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய சீனியர், ஆய்வுக்குக்கூட செல்லாமல் அமைதி காக்கிறாராம். தலைநகரில் அவசர கால மீட்புக் கட்டுப்பாட்டு மையத்துக்கு முதன்மையானவர் சென்றபோது கூட ஆப்சென்ட் ஆனவர் அந்த சமயத்தில், தலைநகரின் பிரபல திரையரங்கில் ஹாயாக ரிலீஸ் படம் பார்த்துக் கொண்டிருந்தாராம்.