தமிழகம்

ஆறு முறை தோல்வி... அசந்து கிடக்கும் அதிமுக... அடிக்க பார்க்கும் பாஜக @ கும்பகோணம்

சி.எஸ். ஆறுமுகம்

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலத்திலிருந்து கும்பகோணம் தொகுதியானது கடந்த ஆறு தேர்தல்களாக திமுக வசமே உள்ளது. இதில், ஐந்து முறை திமுக-விடம் தோற்று அலுத்துப் போன அதிமுக, கடந்த முறை, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தர்வாண்டையாருக்கு தொகுதியை தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. அதனால், திமுகவுக்கு ஆறாவது வெற்றி இன்னும் இலகுவாகிப் போனது.

தொடர்ந்து 6 முறை தாங்களும் தங்கள் கூட்டணியும் தோற்றுக் கொண்டே வருவதால் இந்த முறையும் இங்கு போட்டியிட அதிமுக தயக்கம் காட்டுகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தொகுதியை தங்களுக்கு கேட்டு வாங்கி போட்டியிடத் துடிக்கும் பாஜக, அதற்கான ஆயத்த வேலைகளை துரிதப்படுத்தி வருகிறது.

கும்பகோணத்தின் இந்த தேர்தல் வரலாறு குறித்து நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள் சிலர், ‘‘தொடர்ச்சியாக கும்பகோணத்தில் அதிமுக தோற்கக் காரணமே உட்கட்சிக்குள் நடக்கும் உள்குத்து வேலைகள் தான். அதனால் தான் இங்கு போட்டியிடுவதற்கு அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

இருந்தாலும் தங்களின் சொந்த செல்வாக்கில் ஜெயிக்கலாம் என பாஜக இம்முறை கும்பகோணத்தை தங்களுக்குக் கேட்க நினைக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் அதிமுகவினர் ஒத்து உணர்ந்து வேலை செய்யாதவரை தொகுதியை திமுகவிடம் இருந்து மீட்பது சிரமம் தான்” என்றனர்.

இதுதொடர்பாக பேசிய பாஜகவின் ஆன்மிகப் பிரிவு மாநிலச் செயலாளர் பரமகுரு, ‘‘தொடர் தோல்வியால் கும்பகோணம் தொகுதியை இம்முறை அதிமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படித் தந்தால் இம்முறை கும்ப கோணத்தில் நாங்கள் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறோம். தொகுதி எங்களுக்கு உறுதியானால் பொருளாதாரப் பிரிவுமாநில இணை பொறுப்பாளர் கார்த்திகேயன் தான் இங்கு போட்டியிடுவார். தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் நாங்கள் கார்த்திகேயனுக்காக முன்கூட்டியே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம்” என்றார்.

SCROLL FOR NEXT