உடுமலை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை வேகமாக நிரம்பி வருகிறது. எந்நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், பாலாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி. 1.9 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 51 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 900 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 250 கன அடி நீர், பிரதான கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வரும் நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்நேரமும் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால், பாலாற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, “உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை அதன் முழு கொள்ளளவான 60 அடியில் இன்றைய நிலவரப்படி 51 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்படலாம். எனவே, பாலாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றனர்.