திருவண்ணாமலை | கோப்புப் படம் 
தமிழகம்

தி.மலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தோர் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திருவண்ணாமலையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், மலைச் சரிவில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய நீதிபதிகள், மலைச் சரிவிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT