காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை யார் நினைவில் வைத்திருக்காவிட்டாலும் அரசியல்வாதிகள் கட்டாயம் நினைவில் வைத்திருப்பார்கள். அப்படி நினைவில் வைத்திருப்பதால் தான் அமைச்சர் எ.வ.வேலுவும் அதிர்ஷ்டக் காற்றுள்ள போதே தனது மகனை தேர்தல் அரசியலுக்குள் இழுத்துவந்து தூற்றிக் கொள்ள துடிக்கிறார்.
மூன்று முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு, திமுக தலைமையின் குட் புக்கிலும் இருப்பவர். தலைமையிடம் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தாலும் இத்தனை நாளும் தனது வாரிசுகளை அரசியல் மேடைகளில் அமரவைக்காத வேலு, இப்போது அதற்கான அவசியத்தை உணர்ந்து அவர்களை அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைத்து வருகிறார்.
வேலுவின் மகன்களான கம்பனும் குமரனும் தங்களுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை கவனித்து வருகிறார்கள். இதில், மூத்தவரான கம்பன், திமுக மருத்துவர் அணி மாநிலதுணைத் தலைவராக இருக்கிறார். இவரைத்தான் தனது அரசியல் வாரிசாக அடையாளப்படுத்தி வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் திமுக நிகழ்ச்சிகளில் எல்லாம் மகனை பிரதான முகமாக முன்னிறுத்தும் வேலுவுக்குள் வேறோரு கணக்கும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கம்பனின் ஆதரவாளர்கள் ‘எ.வ.வே.கம்பன் ரசிகர்கள்’ என்ற முகநூல் பக்கத்தின் மூலமாக அவருக்கான ஆதரவு வட்டத்தை விஸ்தரித்து வருகிறார்கள். இத்தனை நாளும் திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் அரசியல் பழகிவந்த கம்பன், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நிகழ்ச்சிகளிலும் முகம்காட்டி வருகிறார்.
அண்மையில் ரிஷிவந்தியம் தொகுதியில் நடைபெற்ற பேருந்து சேவை தொடக்க விழா மற்றும் திருக்கோவிலூரில் திமுக சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சிகளில் கம்பனும் பிரதானப் புள்ளியாக இருந்தார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து ஒரு கணக்குச் சொல்லும் எ.வ.வேலு விசுவாசிகள், “இம்முறை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் கம்பனை களமிறக்க அண்ணன் திட்டமிடுகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை போளூர் நகர அவைத் தலைவர் சரவணனிடம் ஒப்படைத்திருக்கிறார். இதையடுத்து சரவணனும் கம்பனுக்காக சில பூர்வாங்கப் பணிகளை தொடங்கிவிட்டார்” என்கிறார்கள்.
இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டதற்கு, “கட்சித் தலைமை கட்டளையிடும் பணிகளை செய்து வரும் கம்பன், அதற்காக கட்சியினர் மத்தியில் உரிமையுடன் பேசி வருகிறார். இருப்பினும் கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்குக் கட்டுப்பட்டுத்தான் எதையும் சொல்ல முடியும்” என்றார்.