சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட வளிம காப்பு துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வட சென்னை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில், கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் 230/33 கி.வோ. வளிம காப்பு துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு கடந்த 2023-ம்ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.110.92 கோடி செலவில் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
இந்த துணைமின் நிலையத்தின் மூலமாக ஏற்கெனவே இயக்கத்தில் உள்ள கொளத்தூர், பெரியார் நகர், அன்னை நகர், நேர்மை நகர் ஆகிய 33/11 கி.வோ. துணைமின் நிலையங்களுக்கும், தற்போது புதியதாக நிறுவப்பட்டுள்ள கணேஷ் நகர் மற்றும் மாதவரம் ரேடியன்ஸ் 33/11 கி.வோ. துணைமின் நிலையங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.
இந்த துணை மின் நிலையங்களின் வாயிலாக கொளத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், நேர்மை நகர், கணேஷ் நகர், மாதவரம் பகுதிகளில் சுமார் 1லட்சம் தொழில் மின் நுகர்வோர், 1.50 லட்சம் வணிக மின் நுகர்வோர் மற்றும் 3 லட்சம் வீட்டு மின் நுகர்வோர் பயன்பெறுவர்.
மேலும் கணேஷ் நகரில் உள்ள ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதியில் ரூ.12 லட்சம் செலவில் நிறுவப்பட்ட தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை திறந்துவைத்த முதல்வர், கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதியைப் பார்வையிட்டு, அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். முன்னதாக மின்சாரத் துறை சார்பில் நடந்த கண்கவர் ட்ரோன் நிகழ்வையும் முதல்வர் கண்டு ரசித்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகர்பாபு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், மின்வாரியத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் சீ.சுரேஷ்குமார், நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.