தமிழகம்

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்: இபிஎஸ்

அனலி

சென்னை: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (அக்.15), கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், “செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்.” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

அப்போது கூடிய கூட்டத்தை வைத்தே கரூரில் விஜய் பிரச்சாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறை, உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தாலே, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று காரணம் கூறப்பட்டது. எங்களுக்கு அப்படிச் சொல்லிவிட்டு தவெகவுக்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி?. அது சந்தேகத்தை எழுப்புகிறது.

அதேபோல், ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி. உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT