சென்னை: முல்லை பெரியாறில் புதிய அணையைக் கட்டும் முயற்சிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்புபிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், முல்லை பெரியாறு நீர்த்தேக்க மட்டத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். தேவைப்பட்டால், அணையைச் செயலிழக்கச் செய்வதற்கோ அல்லது அணை புனரமைப்பு திட்டத்தைத் தயாரிப்பதற்கோ வழிமுறைகள் உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அக்.13-ம் தேதி விசாரணை மேற்கொண்டது. அப்போது அணையை வலுப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் அல்லது அதை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கலாம் அல்லது புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம். எனவே, இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக, கேரள அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழகத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
அணையின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைத்த குழு, கடந்த 2012-ம் ஆண்டு சமர்பித்த அறிக்கையில் முல்லை பெரியாறு அணை உறுதியாக இருப்பதால், வேறு புதிய அணை கட்டத் தேவை இல்லை, நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள மாநில அரசு, கேரள பாதுகாப்பு பிரிகேட் போன்ற அமைப்புகள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கேரள அரசின் இந்த சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.