மதுரை: கரூரில் கோயிலுக்கு சொந்தமான 508 ஏக்கர் நிலத்தை மீட்பது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கரூர் ஆட்சியர், எஸ்.பி. உட்பட 17 பேர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், "கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 507.88 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டு 6 ஆண்டுகளாகியும் இதுவரை நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் கரூர் எஸ்.பி. எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார்.
அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் வரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.