தமிழகம்

கூட்டணி குறித்து பேச கட்சியினருக்கு காங்கிரஸ் மேலிடத் தலைவர் தடை: எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், அதில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர், அகில இந்திய செயலாளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 2026 தேர்தலுக்கு தயாராவது, காங்கிரஸ் சொத்து மீட்பு நடவடிக்கைகள், கிராம கமிட்டிகளின் செயல்பாடுகள், அவற்றுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, "தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது. அது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்" என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "இக்கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தில் கரூர் பிரச்சினை, போலி மருந்துகள், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீனவர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பேசுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது" என்றார்.

பின்னர் கிரிஷ் சோடன்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்கு திருட்டை பிரதமர் மோடி ஆதரிக்கிறார். வாக்குத் திருட்டை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது மக்களாட்சிக்கு எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் வாக்குதிருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கிறேன். தமிழகத்தில் 1 கோடி கையெழுத்துகளை பெற இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். தமிழகத்தில் கையெழுத்து இயக்கத்தின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளது. இதுவரை 50 லட்சம் கையெழுத்துக்களை தமிழகத்தில் பெற்றிருக்கிறோம். இதற்காக கடுமையாக உழைத்த தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளை நான் பாராட்டுகிறேன். அடுத்த சில தினங்களில் 1 கோடியை கையெழுத்து பெறும் இலக்கை எட்டுவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். தமிழகத்தில் கிராம கமிட்டிகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தீபாவளிக்கு பிறகு தேர்தல் பரப்புரையையும் தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT