சென்னை: கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும். அடுத்த குறுக்கு விசாரணை நவ.11-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, நானே அதை குறுக்கு விசாரணை நடத்தப்போகிறேன்.
டி.ஆர்.பாலு அரசியலுக்கு வந்ததில் இருந்து அவரது 40 ஆண்டு அரசியல் குறித்து தெரிவிக்க உள்ளேன். கரூர் வழக்கு என்பது கட்சி சம்பந்தப்பட்டதல்ல, 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. இதை சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
கரூர் துயரச் சம்பவத்தில், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற வேறுபாடில்லை. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கரூர் வழக்கில் போலியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். சீமானை ஒரு அரசியல் தலைவராக மதிக்கிறேன். ஆனால், கரூர் வழக்கில் சீமான் ஏன் பதற்றப்படுகிறார் என்று தெரியவில்லை.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குட்கா, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வழக்குகளுக்கு சிபிஐ விசாரணைகளை கோரியது. ஆனால் இப்போது ஏன் சிபிஐ விசாரணை வேண்டாம் என்கிறது என தெரியவில்லை. தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையில், கரூர் சென்று மக்களை பார்ப்பதில், நாங்கள் கருத்து சொல்ல முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.