சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ ராம் சமாஜ் நடத்தும் பள்ளி கட்டிடத்தை வரைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க சிஎம்டிஏ-வுக்கும், கட்டிட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மெட்ரிக் பள்ளி இயக்குநருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ ராம் சாமாஜில் தான் வாழ்நாள் உறுப்பினராக இருக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த எம்.வி.ரமணி தாக்கல் செய்துள்ள மனுவில், ராம் சமாஜால் கடந்த 1987ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், அரசு வழங்கிய அங்கீகாரம் கடந்த 2012 ஆண்டு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
விதிகளுக்கு முரணாக இயங்கி வரும் ஸ்ரீ சீதாராம் பள்ளியின் அனுமதியை புதுப்பிப்பது குறித்து அரசு பரீசீலித்து முடிவெடுக்க கோரிய மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் 2 தளங்களுடன் கூடிய குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெற்றுவிட்டு, 3 தளங்களுடன் பள்ளியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மெட்ரிக் பள்ளி இயக்குநர் தரப்பில் 2022 மே மாதம் வரை பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் கட்டிடத்தின் திட்டத்தின் ஒப்புதலை சமர்ப்பிக்காததால், புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தரப்பில் கட்டிட வரைமுறைப்படுத்துதல் விண்ணப்பம் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, ராம் சமாஜ் அளித்த பள்ளி கட்டிட முறைப்படுத்தல் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என சிஎம்டிஏ.-வுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கடுத்த 2 வாரங்களுக்குள் பள்ளியின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதை பெற்றதிலிருந்து நான்கு வாரங்களுக்குள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் முடிவெடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கட்டிடத்திற்கான மற்ற அனைத்து தேவைகளையும் ராம் சமாஜ் பூர்த்தி செய்யத் தவறினால், சட்டப்படி பள்ளிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தும் உத்தரவிட்டுள்ளது.