சேலம்/தருமபுரி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 59,123 கனஅடியாக அதிகரித்த நிலையில், அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடிக்கு மேல் உயர்ந்தது. தென்மேற்கு பருவமழைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்னர் கனமழை கொட்டியது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த 10-ம் தேதி விநாடிக்கு 6,033 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று முன்தினம் 29,540 கனஅடியாகவும், நேற்று 59,123 கனஅடியாகவும் அதிகரித்தது. நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர் மட்டம் 112.48 அடியில் இருந்து நேற்று 115.18 அடியாக உயர்ந்தது. குறிப்பாக ஒரே நாளில் 2.70 அடி அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது.
அணையின் நீர் இருப்பு 81.98 டிஎம்சியில் இருந்து, ஒரே நாளில் 4 டிஎம்சி அதிகரித்து, நேற்று 85.98 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருவது தொடர்கிறது.
அணைக்கான நீர் வரத்து அதிகமாக உள்ள நிலையில் நீர் வளத்துறை அலுவலர்கள், அணையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து இதே அளவில் தொடர்ந்தால் ஓரிரு நாளில் மேட்டூர் அணை நீர் மட்டம் 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல்லில்... இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, அன்று இரவு முதல் குறைய தொடங்கியது. இந்நிலையில் நேற்று மாலை 43 ஆயிரம் கனஅடியாக நீ்ர்வரத்து பதிவானது.