தமிழகம்

தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

ம.மகாராஜன்

சென்னை: தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனிப்பு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சென்னை தி.நகரில் அக்.11 நடைபெற்றது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அதிகாரி தமிழ்ச்செல்வன் பேசும்போது, ‘‘இனிப்பு மற்றும் பலகாரங்கள் விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகளும் உணவு பாதுகாப்புத் துறையில் முறையாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்தால், சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும்போது, தரமான மூலப்பொருட்களை கொண்டு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கலப்படமில்லாமலும் தயாரிக்க வேண்டும்.

இனிப்பு பலகாரங்களில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிஃப்ட் பாக்ஸ்களில் பார்சல் செய்யப்படும் இனிப்புகள், உணவு பாதுகாப்புத் துறையின் 'லேபிள்' விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும்’’ என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிந்தால், 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT