தமிழகம்

ஜனவரியில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி வடிவம் எட்டும்: நயினார் நாகேந்திரன்

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் கூட்டணி இறுதி வடிவத்தை எட்டும்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற கோஷத்துடன் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை நாளை (அக்.12) மதுரையில் தொடங்குகிறார். இதற்காக சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ள ஆண்டாள் சந்நிதியில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என வேண்டினேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பாஜக சார்பில் நான் நாளை மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். பேரணி நாளைக்கு மதுரையில் தொடங்கினாலும் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து முறையாக இங்கிருந்தே எனது பயணத்தை தொடங்குகிறேன். கண்டிப்பாக, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

அதிமுக மீது டிடிவி தினகரனுக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை. என் மீதும் வெறுப்பாகத்தான் பேசினார்கள். இப்போது அமைதியாக உள்ளனர். அவர்களது சொந்த பிரச்சினைக்காக கட்சிகளைப் பற்றி தவறாக பேசுவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஜனவரி மாதத்தில் கூட்டணி இறுதி வடிவத்தை எட்டும். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. ‘நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்’ என திமுக வதந்தி பரப்பி வருகிறது. அதை பொய்யாக்கி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்” என்றார். பாஜக மாநில துணை தலைவர் கோபால்சாமி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT