சென்னை: காசா மீதான திமுகவின் திடீர் கருணைக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தலே காரணம் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: காசாவில் கொல்லப்படும் மக்களுக்காகக் ‘காசாவை காப்போம்’ என்ற முழக்கத்துடன் திமுக கூட்டணியில் உள்ள தமிழக அரசியல் தலைவர்கள் போராடத் தொடங்கியிருப்பதை வரவேற்கிறேன்.
இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மிகப்பெரிய மனித வேட்டை இப்போதுதான் அவர்கள் கண்களுக்குத் தெரிகிறதா, இப்போதுதான் உறக்கத்திலிருந்து எழுந்தார்களோ? ஆபரேசன் சிந்தூர் என்று மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசி போர்தொடுத்த போது அதை வரவேற்று முதல்வர் தலைமையில் பேரணி நடத்திய திமுக அரசு, மணிப்பூர் கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக எந்தப் பேரணியும் நடத்தவில்லை.
இதேபோல 2009-ல் அருகிலிருக்கும் இலங்கையில் கொடும்போரை நிகழ்த்தி லட்சக்கணக்கில் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் போது அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? கடந்த 2023 அக்.11-ம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் என்று பாலஸ்தீன மக்கள் படுகொலையை நியாயப்படுத்தி முரசொலியில் செய்தி வெளியிட்ட திமுக இன்றைக்குக் காசா மக்களுக்காகக் கதறித் துடிப்பது போல் நடிக்கக் காரணம், விரைவில் இங்கே தேர்தல் வருகிறது. முஸ்லீம் மக்களின் வாக்குகளை மொத்தமாகப் பறிப்பதற்கான திட்டம்தான் திமுகவின் திடீர் கருணையும், கண்ணீரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.