அதிமுக பிரச்சார கூட்டத்தில் விஜய் கட்சியின் கொடி இருப்பது நல்ல விஷயம்தான் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட கால்வாய், செம்பூர் மற்றும் நாணல்காடு ஆகிய கிராமங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது சேதமடைந்த 3 வீடுகளுக்கு பதிலாக, தலா ரூ.7 லட்சம் மதிப்பில் பாஜக சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய வீடுகளை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரடியாக சந்தித்து பாஜக சார்பில் அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. மேலும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட பசுவும், கன்றும் கொடுக்கப்படுகிறது. இலவசமாக வீட்டுக்கு காஸ் ஸ்டவ், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மதுரையில் அக். 12-ம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு எழுச்சி பயணம் தொடங்க உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆளும் திமுக அரசு நான்கரை ஆண்டு காலத்தில் என்னென்ன செய்தது, என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்து அதை நிறைவேற்றாமல் உள்ளார்கள் என்பது குறித்து மக்களிடம் விளக்க உள்ளோம்.
அதிமுக பிரச்சார கூட்டத்தில் விஜய் கட்சியின் கொடி இருப்பது நல்ல விஷயம் தானே. மேலும் ஒரு நாட்டில் நல்ல விஷயம் நடக்கும் போது தலைவர்கள் கூடி பேசுவார்கள். ஆனால், தற்போது தொண்டர்களாகவே முடிவெடுத்து வருகிறார்கள். அப்படி என்றால் ஆட்சி மேல் அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை குறைவு இருக்கும். தொண்டர்களின் முடிவு வெற்றியாக அமையும் என்பது தான் எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.