தமிழகம்

மருத்துவர் முன்னிலையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேதப் பரிசோதனை: ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை மருத்துவர் செல்வகுமார் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பிரபல ரவுடியாக இருந்தவர் நாகேந்திரன். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் நேற்று மரணம் அடைந்தார். இதையடுத்து, தன்னுடைய கணவரை விஷம் வைத்து காவல்துறை கொன்று விட்டதாக கூறி அவருடைய உடலை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி நாகேந்திரன் மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நாகேந்திரன் உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் ஆக இருந்த மருத்துவர் செல்வகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், பிரேதப் பரிசோதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அதன் மாதிரிகளை பத்திரப்படுத்தி தடய அறிவியல் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT