அண்ணா மறைந்தபோது பலரும் அஞ்சலி செலுத்தினாலும் கருணாநிதி எழுதிய கவிதை அனைவரையும் உருக வைத்தது. இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா என்று அப்போது கேட்டார். இரவல் பெற்றதை திருப்பித்தர அண்ணா சதுக்கம் நோக்கி அவரது இறுதி பயணம் தொடங்க உள்ளது.
அண்ணா தலைமையில் திமுக 1967-ல் ஆட்சியைப்பிடித்தது. இதுப்பற்றி நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி பெரிதாக விவரித்து எழுதியிருப்பார். அதில் ‘‘பதவி ஏற்கும் முன் தலைவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற அண்ணாவுடன் ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்களை சந்திக்க சென்றோம்.
மாலை வாங்க காசில்லை, கையிலிருந்த பணத்தில் சில எழுமிச்சை பழங்களை வாங்கிக்கொண்டோம். அண்ணா தலைவர்களை சந்தித்தபின்னர் என்னைப்பார்ப்பார். நான் அவரிடம் யாரும் அறியாமல் என்னிடம் உள்ள எழுமிச்சை பழத்தை கொடுப்பேன். அவர் அதை தலைவர்கள் கையில் கொடுத்துவிடுவார்’’ என்று சுவைபட எழுதியிருப்பார்.
அடுத்த ஆண்டுகளில் அண்ணாவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு தொண்டைப்புற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அண்ணா 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மறைந்தார். நாடே சோகத்தில் மூழ்கியது. அண்ணாவிற்காக பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் செய்தி வாசித்தனர், ஆனால் கருணாநிதி அண்ணாவுக்காக எழுதிய கடைசி கவிதை மிகவும் உருக்கமானது. அது திமுக தொண்டர்களால் மிகவும் விரும்பி படிக்கப்பட்டது. கருணாநிதி தனது வாழ்க்கைப்பயணமாக நெஞ்சுக்கு நீதி எனும் நூலை பல பாகங்கள் எழுதினார். இதில் முதல் பாகம் முக்கியமானது.
அதில் அண்ணாவின் மறைவுச்செய்தியோடு முடித்திருப்பார். அந்த புத்தகத்தில் முடிவுரையாக இந்த கவிதையைத்தான் எழுதி முடித்திருப்பார். அவர் எழுதிய இதயத்தை இரவலாக தந்திடண்ணா கவிதை வரியில் இரவலாக தந்த இதயத்தை நான் வரும்போது திருப்பித்தருகிறேன் என முடித்திருப்பார்.
50 ஆண்டுகாலம் அண்ணாவின் இதயத்தை இரவல் பெற்ற தம்பி அதை திருப்பித்தரும் நேரம் நெருங்கியதால் தனது இறுதிப்பயணத்தை தொடங்க உள்ளார். இரவல் தர அண்ணனை நோக்கி செல்லும் அவரது பயணத்தில் அவரும் திரும்ப வரமாட்டார் என்பதுதான் திமுக தொண்டர்களின் வேதனை.
1969-ம் ஆண்டு அண்ணா மறைவின்போது கருணாநிதி எழுதிய அந்த கவிதாஞ்சலி:
‘‘பத்துச் சிலை வைத்ததினால் - அண்ணன் தமிழின்பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா... இதயமன்னா...
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற்கரையில் உறங்குதியோ?...
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் - அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?’’-கருணாநிதி( 03/02/1969)