தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா 
தமிழகம்

கரூர் நெரிசல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 காயமடைந்தனர். இதையடுத்து பல்வேறு கட்சியினர், குழுக்கள் கரூரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இன்று (அக். 4ம் தேதி) கரூர் வேலுசாமிபுரத்தில் சம்பவ இடத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். தொடர்ந்து கரூர் வேலுசாமிபுரத்தில் உள்ள இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் துருவிஷ்ணு வீட்டிற்குச் சென்று தந்தை, தாய், அத்தை ஆகியோருக்கு ஆறுதல் கூறி நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து வடிவேல் நகரில் உள்ள காவலர் மனைவி சுகன்யா வீட் டிற்கு சென்று ஆறுதல் கூறி சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்து ஆறுதல் கூறி சம்பவம் குறித்து விசாரித்து அறிந்தார்.

4 குடும்பங்களை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த ஏமூர்புதூர், உப்பிடமங்கலம், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

கரூர் சுற்றுலா மாளிகையில் ஆட்சியர் மீ.தங்கவேல், திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷிநிர்மல்குமார், எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தி ஆகியோரிடம் கூ ட்ட நெரிசல், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார்.

இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா செய்தியாளர்களிடம் கூறியது: கரூரில் செப். 27ம் தேதி நடந்த சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு எனது சார்பிலும் ஆணையத்தின் சார்பிலும் அஞ்சலியையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் அனைவரும் என் சொந்த மக்கள். எனது பொறுப்பு காரணமாக உயிரிழந்தவர்களில் பட்டியலின மக்கள் குடும்பங்களை சந்திக்க முடிந்தது. அவர்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது. இச்சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விழிப்புடன் இருந்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம் என நினைக்கிறேன்.

இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து அது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு விசாரணை ஆணையத்தை கேட் டுக்கொள்கிறேன். இசம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.

ஏனெனில் உயிரிழந்தவர்கள் மிகவும் ஏழைகள். துன்பப்படுபவர்கள் இந்த சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாங்கள் கேட்டுள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடர்வோம்.” என்றார்.

SCROLL FOR NEXT