திருத்தணி அருகே இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதலில், 5 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள செருக்குனூர் கிராமத்தில் வசிக்கும் இருதரப்பினரிடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இச்சூழலில், ஞாயிற்றுக்கிழமை மாலை செருக்குனூர் கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன் மற்றும் அவர் மனைவி வனிதா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கே.ஜி. கண்டிகை சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செருக்குனூர் பகுதியில் நின்றிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மேகநாதன் மற்றும் வனிதா தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக, செருக்குனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றொரு தரப்பைச் சேர்ந்த உதயகுமார், கோவிந்தன், ஞானசேகரன் ஆகிய மூன்று பேரை, ஒரு தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இவ்விரு சம்பவங்களில் காயமடைந்த ஐந்து பேரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 24 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், ஒரு தரப்பைச் சேர்ந்த சுரேஷ், ரவி, சுப்ரமணி, ரமேஷ், விஜயன், தனசேகரன் ஆகிய 6 பேர், மற்றொரு தரப்பைச் சேர்ந்த குப்பன், மூர்த்தி, சங்கர், பழனி, பூபாலன், ராதாகிருஷ்ணன், சடையப்பன், வேலாயுதம் ஆகிய 8 பேர் என, 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். செருக்குனூர் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.