மதுரையில் பிரபல காட்டன் மில்லுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் பிரபல 'மதுரா கோட்ஸ்' காட்டன் மில் செயல்படுகிறது
. மதுரை நகரில் தொடங்கிய மிகவும் பழமையான இந்த மில் தற்போது நவீனப் படுத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மேல் மில் அலுவலக போனில் ஒருவர் பேசினார். அவர், மில் வளாகத்தில் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடிக்கும் என, கூறிவிட்டு தனது இணைப்பை துண்டித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மில் நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் உடனே வெளியேற்றியது. கரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் அப்பிரிவினர் அங்கு வந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர், தடுப்பு கருவிகள், மோப்ப நாய் உதவியுடன் மில் வளாகம் முழுவதும் குடோன் உட்பட அனைத்து பகுதியிலும் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நீடிக்கிறது.
அங்கு பணிபுரியும் தொழிலாளர் யாராவது வதந்தியை கிளப்பும் நோக்கில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என, போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதன்படி, மிரட்டல் விடுத்த போன் நம்பரை சேகரித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் மில் தொழிலாளர்கள் மத்திய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.