தமிழகம்

கோபியில் பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு: செங்கோட்டையன் புறக்கணிப்பு

கி.பார்த்திபன்

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் கொள்வதற்காக சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கிளம்பிச் சென்றார்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக இன்று காலை சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி காரில் கிளம்பினார். ஈரோடு மாவட்டம் பவானி வழியாக கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே வந்தார்.

அப்போது, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளர் செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, ஜெயக்குமார் எம்எல்ஏ, கோபி நகரச் செயலாளர் பிரிணியோ கணேஷ் முன்னிலையில் ஏராளமான அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். பின், அங்கிருந்து கிளம்பி சத்தியமங்கலம் சென்றார். அங்கும் அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து, செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அப்போது, அதிமுகவை ஒருங்கிணைக் காமல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இச்சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் ஏற்கெனவே செங்கோட்டையன் சென்னை சென்று சென்றுவிட்டார்.

முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமி முதன்முதலாக கோவை மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தை தொடங்கும்போது கோபிச்செட்டிபாளையம் வழியாக சென்றார். அப்போதும் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT