தமிழகம்

உடுமலை இறைச்சி உணவு நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை

எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலையில் உள்ள சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கறி கோழி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பண்ணையாளர்கள் மூலம் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் கோவையில் உள்ளது. சவுந்திரராஜன் மற்றும் சுந்தரராஜன் ஆகிய சகோதரர்கள் இருவரையும் உரிமையாளர்களாக கொண்டு இயங்கி வரும் நிறுவனத்தில் 1000-க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், காலை 11.30 மணியளவில் 3 இன்னோவா கார்களில் வந்த 10 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள், உடுமலை நேரு வீதியில் உள்ள சுகுணா ஃபுட்ஸ் பதிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த உடுமலை போலீஸார், ஆய்வுக்கு வந்துள்ள அதிகாரிகள் குறித்து விசாரித்தனர்.

அதில் வருமானவரித் துறை பெண் துணை ஆணையர் பெர்ணாண்டோ தலைமையில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதேபோல இந்நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT