தமிழகம்

நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

இ.மணிகண்டன்

விருதுநகர்: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து நலத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் விருதுநகர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அரசு விருந்தினர் மாளிகை அருகே திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பூங்கொத்து கொடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார்.

பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, உங்களுடன் ஸ்டாலின் திட்டம், பெறப்பட்ட மனுக்களின் விவரம், நிலுவையில் உள்ள மனுக்கள் விவரம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் விவரம், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கான உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை விரைந்து செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த "இந்தியாவின் விளையாட்டு தலைநகர் சென்னை" என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து சாத்தூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் சாத்தூர், அருப்புக்கோட்டை, ரொம்ப கோட்டை பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் தொடர்பாக பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.

தொடர்ந்து, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இன்று மாலை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 837 பயனாளிகளுக்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

SCROLL FOR NEXT