கோவை விமான நிலைய வளாகத்தில் இன்று நடந்த ‘பயணிகள் சேவை திருவிழா’ நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரஜினியுடன் பயணிகள், கல்லூரி மாணவிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம்: இல.ராஜகோபால் 
தமிழகம்

கோவை விமான நிலையத்தில் ‘பயணிகள் சேவை விழா’வில் நடிகர் ரஜினிகாந்த்!

இல.ராஜகோபால்

கோவை: இந்திய விமான நிலைய ஆணையகம் (ஏஏஐ) சார்பில் ‘பயணிகள் சேவை திருவிழா’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி கோவை விமான நிலையத்தில் இன்று நடந்தது.

அதிகாலை முதல் விமானங்களில் வந்த பயணிகளை கல்லூரி மாணவ, மாணவிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. மேலும் மருத்துவம் முகாம், கண் பரிசோதனை முகாம் நடந்தது. காளப்பட்டி அரசு பள்ளி மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விமானத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து வல்லுநர்கள் ஆலோசனை வழங்கி கலந்துரையாடினர்.

விமான நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.

முன்னதாக, காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அவரை கல்லூரி மாணவ, மாணவிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து வளாகத்தில் நடத்த கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட நடிகர் ரஜினி அங்கு வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் கட் அவுட் முன் நின்று மாணவ, மாணவிகள், விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், பயணிகள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

தொடர்ந்து விமான நிலைய நுழைவாயில் அருகில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி பேசும்போது, ”கேரளாவில் நடைபெறும் ‘ஜெயிலர் 2’ சினிமா படப்படிப்பில் பங்கேற்க கோவை வந்துள்ளேன். ஆறு நாட்கள் அங்கு சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று நடிகர் ரஜினி கூறினார்.

SCROLL FOR NEXT