கோப்புப் படம் 
தமிழகம்

வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உறுதிப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தேர்தலின்போது, மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான சட்டவிதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஆய்வு செய்தபோது, இந்த விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளதாகக் கூறி, மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், “மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. வாக்குச் சாவடிகளை அணுகுவதற்கு, சாய்வுதளம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இணையதளத்தில் கண்பார்வை குறைபாடுடையோர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். இந்த விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கடந்த தேர்தலில் இந்த விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விரிவான பதில்மனு தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT