திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, கே.கே. நகரைச் சேர்ந்தவர்கள் திருக்குமரன்- பபிதா தம்பதியினர். இவர்களது 4 வயது மகள் திருத்தணி அடுத்த முருகம்பட்டுவில் தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறாள். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வகுப்பு முடிந்து பள்ளி வாகனத்தில் வந்த சிறுமி திருத்தணி-சித்தூர் சாலையில் பொதுப்பணித் துறை அலுவலகம் பின்புறம் இறங்கினாள். பிறகு, வீட்டுக்கு அழைத்துச் செல்ல காத்திருந்த தன் தாத்தா சீனிவாசுலுவுடன் (70) நடந்து சென்றாள். அப்போது சீனிவாசுலு, சிறுமியின் புத்தக பையை சுமந்து முன்னே செல்ல, அவரை பின் தொடர்ந்து சென்ற சிறுமி மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டாள்.
விசாரணையில், சிறுமியின் வீட்டருகே வசித்த கெளதமன் (19) உள்ளிட்ட 5 பேர் கும்பல் பணம் பறிக்கும் திட்டத்துடன் சிறுமியை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து கெளதமன் (19), முருகேசன் (19), விமல்ராஜ் (23) ராஜ் (30) ஆகிய 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுமியை ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த தேசம்மாள் கோயில் அருகே, கடத்தல் கும்பலில் ஒருவனான திருத்தணி தாழவேடுவைச் சேர்ந்த சதீஷ் (24) வைத்திருப்பதும், சிறுமியின் பெற்றோரிடம் பேரம் பேச, அவர்களின் தொலைபேசி எண்ணை சேகரிக்கும் வேலையில் கெளதமன் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆந்திராவுக்கு சென்ற போலீஸார், நகரி போலீஸா ரின் உதவியுடன், செவ்வாய்க் கிழமை மதியம் சிறுமியை மீட்டு, சதீஷை கைது செய் தனர். மீட்கப்பட்ட சிறுமி, திருவள் ளூர் எஸ்.பி. சரவணன் முன்னிலை யில் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டார். கடத்தல் கும்பலிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.