கணையம் பாதிக்கப்படுவதைத் தடுக்க மது குடிப்பதையும், புகை பிடிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று சென்னை அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை யில் பொதுமக்கள் - டாக்டர்கள் இடையே சுமூக உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அவ்வப்போது நடத்தப்படுகிறது. இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில், கணையம் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கணைய நோய்கள் குறித்த அவர்களது கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை டாக்டர்கள் விளக்கமாக பதில் அளித்தனர்.
கணைய நோய்கள் குறித்து இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது:
கணையம் என்பது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று. உடலில் கொழுப்பு, புரதம் போன்றவற்றை சரியான அளவில் வைத்துக்கொள்ள இது உதவுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது. கணையம் பாதிக்கப்படுவதற்கு பித்தப்பை கல் உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக மது, புகை பழக்கம் உள்ளது. கணைய புற்றுநோய், நாள்பட்ட கணைய அழற்சி (Chronic Pancreatitis), தீவிர கணைய அழற்சி (Acute Pancreatitis) போன்றவை கணைய பாதிப்பு நோய்களாகும். கணையம் பாதிக்கப்பட்டால் மஞ்சள் காமாலை, சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
கணைய பாதிப்புக்கு மஞ்சள் காமாலை முக்கியமான அறிகுறியாகும். மஞ்சள் காமாலை இருந்தால் அது சாதாரண மஞ்சள் காமாலையா, கணையம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட மஞ்சள் காமாலையா என்பதை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது தவிர, வயிற்று வலி இருக்கும். வயிற்று வலியால் உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டும். வயிற்றில் இருக்கும் வலி, இடுப்புப் பகுதிக்கு பரவி, நிமிர்ந்து உட்கார்ந்தால் வலி இருக்கும். இதனால், குனிந்து உட்கார்ந்திருப்பது வசதியாகத் தோன்றும். அதிகப் படியான பித்தத்தால் மஞ்சள், பச்சை நிறத்தில் வாந்தி இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரக்கூடும். வயிறு உப்புசமாக இருக்கும். ஏப்பம், வாயு வெளியேறாது.
கணையம் பாதிக்கப்படாமல் இருக்க மது குடிப்பதையும், புகை பிடிப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். தாங்களாகவே கடைக்குச் சென்று மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய என்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. குழந்தை களுக்கு மஞ்சள் காமாலை, அம்மை, ரூபெல்லா உள்ளிட்ட அனைத்து தடுப்பூசி களையும் போட வேண்டும்.
கணைய மாற்று அறுவை சிகிச்சை இன்னும் முழுவதுமாக வெற்றி அடையவில்லை. இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் இருக்கிறது. எனவே, கணையம் பாதிக்கப் படாமல் பாதுகாத்துக் கொள்வது மிகமிக முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.