தமிழகம்

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

செ.ஆனந்த விநாயகம்

சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்துவது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரகாஷ் கர்காவா அடங்கிய அமர்வு கூறியதாவது:

பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறியிருப்பது அதிருப்தியளிக்கிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யாமல், அவற்றை கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான, ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், சிலைகளை கரைப்பதற்கு ஏன் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கட்டணம் வசூலித்தால் அந்த நிதியை கொண்டு, சிலை கரைப்புக்கு பிறகு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT