திருச்சி முக்கொம்பில் நேற்று ஆற்றுப் பாதுகாப்புக் கோட்ட உதவிச் செயற்பொறியாளர் முருகானந்தத்தை சந்தித்து மனு அளித்த திருப்பராய்த்துறை விவசாயிகள். 
தமிழகம்

புது அய்யன் வாய்க்காலை கடைமடை வரை தூர் வார வேண்டும்: திருப்பராய்த்துறை விவசாயிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் தொடங்கும் புது அய்யன் வாய்க்காலை கடைமடை வரை தூர் வார வேண்டும் என திருப்பராய்த்துறை கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: சிறுகமணி, காவல் காரன்பாளையம், பெருகமணி, திருப்பராயத்துறை, எலமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,592 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு புது அய்யன் வாய்க்கால் நீரே பாசன ஆதாரம். ஆனால், திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து வரும் 50-க்கும் அதிகமான விவசாயிகளின் நிலங்களுக்கு புது அய்யன் வாய்க்காலில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக நீர் வரவில்லை.

இதனால் டீசல் மின் மோட்டார் மூலம் பாசனம் செய்கிறோம். பேட்டைவாய்த்தலை பிரதான தேசிய நெடுஞ்சாலையில் புது அய்யன் வாய்க்காலின் அளவு சுருங்கிவிட்டது. மேலும், திருப்பராய்த்துறை, எலமனூர் கிராமங்களுக்கு வரும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்தப் பகுதிகளுக்கு சொட்டு நீர்கூட வருவதில்லை.

எனவே, புது அய்யன் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, கடைமடை வரை வாய்க்காலை தூர் வாரி திருப்பராய்த்துறை, எலமனூர் பகுதி விவசாய நிலங்களுக்கு நீர் கிடைக்க நீர்வளத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்நிலையில், திருப்பராய்த்துறை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆற்றுப் பாதுகாப்புக் கோட்ட உதவிச் செயற்பொறியாளர் முருகானந்தம் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அவரிடம், புது அய்யன் வாய்க்காலை கடைமடை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் கரைகள் அமைத்துத்தர வேண்டும். கொடிங்கால் வாய்க்காலில் இருபுறமும் கரைகள் அமைத்து, உடைந்து போன கீழ்போக்கு குழாய், மதகுகளை சரி செய்து தர வேண்டும். அணலை உய்யக்கொண்டான் வாய்க்காலில் தீச்சபுரம் குழுமியில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT