தமிழகம்

ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைப்பதில் திமுக திரைமறைவில் தில்லுமுல்லு: டிடிவி தினகரன்

மு.சக்தி

சென்னை: ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, அதனை மத்திய அரசின் பயன்பாட்டில் இல்லாத பழைய இணையதளத்தில் பதிவேற்றியது மூலம் திமுக அரசின் தில்லுமுல்லு வெளிச்சத்திற்கு வந்துள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதா ? – விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் திமுக அரசின் திரைமறைவு தில்லுமுல்லு வேலைகள் கடும் கண்டனத்திற்குரியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாநில அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருக்கும் அனுமதியின் படி ராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், கீழ்செல்வனூர், பூக்குளம், வல்லக்குளம், அரியக்குடி உள்ளிட்ட 20 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்கும் பணிக்கு அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைப்பதற்காக கடந்த மார்ச் மாதமே அனுமதி வழங்கிவிட்டு, அதனை மத்திய அரசின் புதிய அதிகாரப்பூர்வ சுற்றுச்சூழல் துறை இணையத்தில் பதிவேற்றாமல், பயன்பாட்டில் இல்லாத பழைய இணையதளத்தில் பதிவேற்றியிருப்பதன் மூலம் திமுக அரசின் தில்லுமுல்லு வேலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது எனவும், விவசாய பெருங்குடிகளையும், காவிரி படுகையையும் கண்ணை இமை காப்பது போல காப்போம் என வீர வசனம் பேசிவிட்டு திரை மறைவில் அதற்கான அனுமதியை கொடுத்திருப்பது விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.

காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆராய்ந்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழு, தன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை பொதுவெளியில் வெளியிடாமல் மூடி மறைப்பதும் திமுக அரசின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் இனி எந்த விவசாயப் பகுதிகளிலும் இதுபோன்ற பணிகள் நடைபெறாத வகையில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT