மதுரை: “அரசியலில் விஜய் நிறைய பாடம் படிக்க வேண்டி உள்ளது. எம்ஜிஆர் மாதிரி என அவர் தன்னை ஒப்பிடுவது தவறு” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அதிமுகவுக்கென ஒரு கொள்கை உள்ளது. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். லஞ்சம் லாவண்யம், ஊழல் இல்லாத அரசை உருவாக்கி தர வேண்டும் என எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஏழைக்களுக்கான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செய்தார். எம்ஜிஆர் இருக்கும் போது, 17 லட்சம் தொண்டர்கள். இதை ஜெயலலிதா ஒன்றரை கோடியாக அதிகரித்தார். தற்போது 2.50 கோடி தொண்டர்கள் உள்ளனர்.
எம்ஜிஆரை சிவாஜி, பாக்யராஜ், டிராஜேந்தர், விஷால் என எல்லோரும் வாரிசு என கூறினர். முக.ஸ்டாலின் கூட பெரியப்பா என கூறுகிறார். விஜயகாந்த் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றும் கூறினார். ஆனால், மக்கள் ஏற்றது அதிமுகவை மட்டுமே. மதுரையில் ஒருவர் (விஜய்) மாநாட்டை நடத்தி விட்டு , திடீர் சாம்பார், ஃபாஸ்ட் புட் போன்று நேரடியாக முதல்வராக முயற்சிக்கிறார். அவர் அரசியலில் நிறைய பாடம் படிக்க வேண்டி உள்ளது.
எம்ஜிஆர் மாதிரி என அவர் தன்னை ஒப்பிடுவது தவறு. அண்ணாவிடம் எம்ஜிஆர் பாடம் படித்தார். திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டவர் எம்ஜிஆர். அது போன்று எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர், முதல்வர், பொதுச் செயலாளர் என படிப்படியாக உயர்ந்தவர் எடப்பாடியார். அரசு ஊழியர்களுக்கு அல்வா போன்ற திமுக ஆட்சி அவலங்களுக்கு மக்கள் பதில் கொடுப்பர். 2026-ல் 234 தொகுதியிலும் வென்று எடப்பாடியார் முதல்வராக வருவார்” என்றார்.