சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.23) டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவு முழுவதும் கடும் புழுக்கம் நிலவியது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து குளிர்வித்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிசா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் ஆக.25-ம் தேதி உருவாகக்கூடும். தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.23) ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 24 முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி (நாளை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 12 செ.மீ மழை, ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ மழை, அடையாரில் 10 செ.மீ மழை, பள்ளிக்கரணை, கண்ணகி நகர், மேடவாக்கம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை, சைதாப்பேட்டை, நீலாங்கரை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை, வேளச்சேரி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.