தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (ஆக.21) ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT