ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழை தொடரும் நிலையில், சூறாவளி காற்றினால் மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுகின்றன. இதனால் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு மின்சாரம் இல்லாமல் ஊட்டி நகரமே இருளில் மூழ்கியது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக கன மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்து வருகின்றன. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு ஊட்டி நகரத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் ஊட்டி நகரம் இருளில் மூழ்கியது. நேற்று காலை 9 மணியளவில் தான் மின் விநியோகம் சீரானது.
ஊட்டி தீட்டுக்கலிலிருந்து மேல் கவ்வட்டி செல்லும் சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீர்படுத்தினர். ஊட்டி மான் பூங்கா சாலையில் புதிய படகு இல்லம் சுற்றுச்சுவர் மீது மரம் விழுந்தது. கன மழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி புதிய படகு இல்லம் மூடப்படுவதாக சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
நேற்று காலையில் மழையின் தாக்கம் சற்று குறைந்து, மாலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தொடர் மழையால் பகல் நேரங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. மக்கள் துணிகளை உலர்த்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.