சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீட்டு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் புதிய காப்பீட்டு உதவி மையத்தை அந்நிறுவனத்தின் தலைவர் கிரிஜா சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
மருத்துவக் காப்பீடு தொடர்பான தகவல்கள், கோரிக்கைக்கான தீர்வுகளை நோயாளிகளுக்கு உடனுக்குடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு மையத்தைத் திறந்து வைத்து கிரிஜா சுப்பிரமணியன் பேசுகையில், “மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த காலகட்டத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் இன்றைக்கு திறக்கப்பட்டுள்ள உதவி மையம் தேசிய பரிமாற்ற காப்பீடு, ரொக்கமில்லா காப்பீடுகளுக்கான செயல்முறைகளில் முன்கூட்டியே பணம் செலுத்தாமல் சுமுகமாக மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யும்.
விரிவுபடுத்த திட்டம்: அதேபோல் பணமில்லா நடைமுறை, ஆவணப்படுத்துதல், முழுமையான காப்பீட்டு கோருதல் போன்ற பணிகளுக்கு முதல் கட்டத்திலிருந்து இறுதி வரை உதவிகள் வழங்கப்படும். முக்கியமான மருத்துவமனைகளில் சுமுகமான சூழலை உருவாக்க நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் உதவி மையங்களைத் திறக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.
இதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களிலும் உதவி மையம் அமைப்பதை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கே.பாலாஜி சிங், மருத்துவ இயக்குநர் சுதாகர் சிங், காப்பீட்டு பொதுமேலாளர் ஆர்.மோகன், பொதுமேலாளர் ரமேஷ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் எம்.வி.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.